Thursday 18 April 2013

முதுமை அடைந்த பின் முழுமையாக அறியலாம்.

 ஆண் துணையின்றி  பெண்ணால் வாழ முடியும் .பெண் துணையின்றி ஆணால் வாழ்வது கடினம்.  இதனை முதுமை அடைந்த பின் முழுமையாக அறியலாம்.

 நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த அருள் என்பது உண்மையாக இருந்தாலும் கணவனாகி காலத்தோடு அவளோடு ஒன்றி இணைந்த நாம் அவளது மனதை அறிந்து செயல்பட்டோமா ! என்பது அறிந்துக் கொள்ள முடியாத ஒன்றுதான் . முதுமை வந்தபோதுதான் அவள் நமக்காகவும் குடும்பத்திற்காகவும் ஆற்றிய சேவையை அறிய முடிகின்றது . அறிந்தபோது அதனை அவளிடம் சொல்லி மன வேதனையை வெளியிட்டால் 'அதனை இப்பொழுது நினைத்து ஆவப் போவது என்ன! நம் குழந்தைகள் நல வாழ்வு பெற்றால் போதும் அதற்கு இறைவனை வேண்டுவோம்' என்ற ஆறுதல் பதில்தான் வரும். 

 முதுமையின்   காரணமாக    உடல் நலம் குன்றியது .அதனால் உள்ளம் சோர்வு அடைய   சோபாவில் ஓய்வாக அமர்திருந்தேன் .பல கற்பனைகள், கடந்த கால நினைவுகள், தனியாக விடப்பட்டு விட்டேனோ. முதுமை என்னை மற்றவருக்கு சுமையாக்கி விடுமோ ! நாம் மற்றவருக்கு சுமைதாங்கியாக வாழ்ந்தோமே ...இப்படி பல எண்ணங்கள்   எல்லாம் என் மனதில் இழையோடிக்கொண்டே  இருக்க மனம் ஒரு நிலை படாமல் கண் இமைகள்  லேசாக மூடிய நிலையில் இருந்தேன் .



எனது குளிர்ந்த கை  மீது மற்றவரின் உள்ளங்கை  வைக்கப்படுவதனை உணர்கின்றேன் அது என் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒத்தடம் கொடுப்பதுபோல் இருக்க உள்ளத்தில் தடவுவது போல் உணர்வு .

அந்த நிலை நீடிக்க விரும்பினேன் , என் கண்களிலிருந்து சூடான நீர் வழிய ஆரம்பித்தது ,எனது கை மேல் வைத்த கை அப்படியே இருக்க அவரின் மற்றொரு கை எனது கன்னம் மீது  வழிந்த  கண்ணீரை துடைத்து விட்டது.

 காலமெல்லாம்  உடன் இருந்து ஓயாத உழைத்து பணிவிடை செய்த இப்பெண்ணின் அருமைதனை இப்பொழுது   அதிகமாகவே   உணர்கின்றேன்.
"நீ இருக்கும்பொழுதே இறைவன் என்னை முதலில் அழைக்க விரும்புகின்றேன்" என வாய் புலம்ப அந்த மூதாட்டி எனது வாயினை பொத்தி எல்லாம் இறைவன் அறிவான் அவன் நாட்டமின்றி ஒன்றும் நடக்காது என்று என்னை அமைதி படுத்துகிறாள் .
காலமெல்லாம் நான்  அவளுக்கு கொடுத்த ஆறுதல் ....!
அவள் தந்த ஆறுதலுக்கு இணையாகி விடுமோ! மனம் அமைதியானது 

 தூய்மையான எண்ணமும், கடுமையான உழைப்பும். ஆழமான இறை பக்தியும் கொண்ட அந்த மூதாட்டி எனக்கு தந்த ஆறுதல் வார்த்தை... மிக்க சக்தி வாய்ந்ததாக இருந்து  என் மனதில் முதுமை என்ற எண்ணம் போய் மன அமைதியை அடைந்தது .  என்றும் அவள்  நினைவில் இருக்கும் நான் இன்று அதிகமாகவே அவள் என்னோடு கடத்திய காலங்களும் இழையோட ஆரம்பித்ததை அறிகின்றேன் .

2 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    சிந்தனைக்கு வந்த ஒரு பாட்டு :

    /// ஆலம் விழுதுகள் போல்...
    உறவு ஆயிரம் இருந்துமென்ன...?
    வேரென நீயிருந்தால்... அதில் நான்
    வீழ்ந்து விடாதிருப்பேன்... ///

    ReplyDelete
  2. '/// ஆலம் விழுதுகள் போல்...
    உறவு ஆயிரம் இருந்துமென்ன...?
    வேரென நீயிருந்தால்... அதில் நான்
    வீழ்ந்து விடாதிருப்பேன்... ///' அருமையிலும் அருமை . முழு கட்டுரையே உள்வாங்கிக் கொண்ட வரிகள்.

    ReplyDelete